தொடர்புடைய கட்டுரை


பிக்பாஸ் அரக்கனா!

அதிமேதாவி ஆனந்தன்

21st Aug 2018

A   A   A

இப்பொழுதெல்லாம் இரவு படுக்கைக்கு செல்ல பதினோரு மணி தாண்டி விடுகிறது. பிக்பாஸ் என்றொரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். தமிழ் முதலான தென்னிந்திய மொழிகளுக்கு தான் இது புதிது. வெளிநாடுகளில் ஆங்கிலத்திலும், இந்தியாவில் இந்தியிலும் ஏற்கெனவே பல முறை நடத்தி முடிக்கப்பட்ட நிகழ்ச்சி இது. வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கார்ந்து பார்ப்பதால் கெடுவது என்னவோ என் தூக்கம்தான்.

சரி என்னதான் நடக்கிறது என்று இரண்டொரு நாட்கள் பார்த்தால், அதை தொகுத்து வழங்குபவர் கொடுக்கும் விளக்கம், ஏதோ கூட்டுக்குடும்பச் சூழ்நிலையில் வாழ பயிற்சி அளிப்பதுபோல் பேசுகிறார். கேட்டுக் கொண்டிருந்த நான் சிரித்துவிட்டேன்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ஒவ்வொரு வார இறுதியிலும் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார், ‘இந்த வாரம் நடந்த சம்பவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?’ என்பதுதான் அந்த கேள்வி. உண்மையில் இதுதான் மிகப்பெரிய நகைச்சுவையே…

அதிக வயது வித்தியாசம் இல்லாத பத்து பதினைந்து பேர் சேர்ந்து இருக்கும் இடத்தில் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பது புரியவில்லை. வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை, பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டுமானால் அந்த இடத்தில் குறைந்தபட்சம் இரண்டு வயோதிகர்கள், மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருக்க வேண்டாமா? மனதில் எழுந்த கேள்விகளோடு சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

வந்துவிட்டார் மிஸ்டர் அனுபவம். “என்ன ஆனந்தா.. மீண்டும் சிந்தனையா?” கேள்வியோடு என் முகத்தைப் பார்த்தார். “சொல் ஆனந்தா. பிக்பாஸுடன் உனக்கு என்ன பிரச்சனை?”

”பிக்பாஸுடன் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பிக்பாஸையே பிரச்சனைக்குரியதாகத் தான் பார்க்கிறேன். அதை பார்ப்பதால் ஒரு பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை.

”சரி. நன்றாக யோசித்துச் சொல், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரயோஜனமானவை தானா?” கேட்டவர் உதட்டினில் குறும்பாக எட்டிப்பார்த்த சிரிப்பை நான் கவனிக்காமல் இல்லை. “அப்படி நடத்தப்படும் பத்தோடு இதுவும் ஒன்று சேர்ந்து பதினொன்று அவ்வளவுதானே?” மீண்டும் என் முகத்தைப் பார்த்தார்.

”அப்படி விட்டுவிட முடியாதே.. மக்களுள் அதிகமானோர் பார்க்கும் நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகி விட்டதே!”

”இருக்கலாம் ஆனந்தா. ஆனால் புதிதாக ஒரு நிகழ்ச்சி. அதுவும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

”ஆனால் நாம் திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசுவதால், செலவே இல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் கிடைத்துவிடுகிறது. அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே தற்போது செய்ய முடிந்ததாக இருக்கும் என்பது என் எண்ணம்.”

”அப்படியானால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதை தடுக்க வேண்டாம் என்கிறீர்களா?” கேள்வியோடு மிஸ்டர் அனுபவத்தின் முகத்தை பார்த்தேன்.

”அது, இதுபோன்ற நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு அமர்ந்து பார்ப்பவர்கள் யோசிக்க வேண்டியது. நம் வீட்டு பெண்களை இப்படி யாரோ முன்பின் தெரியாத ஆண்களோடு ஒரே வீட்டில் இருக்க வைத்து கேமராவில் படம்பிடித்து ஊருக்கெல்லாம் காட்டுவோமா அல்லது குடும்பத்துடன் அமர்ந்துதான் பார்ப்போமா? கொஞ்சமாவது யோசிக்க வேண்டும் அல்லவா?”

”தங்கள் வீட்டு பிள்ளைகளை நிச்சயமாக விடமாட்டார்கள் தான். ஆனால், இது யாரோ தானே ஒட்டா உறவா என்று தானே பார்க்கிறார்கள்.”

”இருக்கலாம் ஆனந்தா. ஆனால், நம் அருகில் அமர்ந்து பார்க்கும் சிறு பிள்ளைகள் முதல் இளம்வயது குழந்தைகள் வரை அவர்களது மனதில் நாமும் உடன் இருந்து பார்ப்பதால் அதில் தவறொன்றும் இல்லை என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிடும். பிறகு காலம் கடந்து கண்ணீர் சிந்துவதால் பலன் இருக்காது…

”நிச்சயமாக இது நம் கலாச்சாரத்துக்கு ஒத்துவராத ஒரு நிகழ்ச்சிதான். நாமாக இத்தகைய நிகழ்ச்சிகளை புறக்கணித்து விடுவதன் மூலம் இவற்றை தடுக்கலாம்.”

”உண்மைதான் மிஸ்டர் அனுபவம். நம்மால் முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளின் தீமைகளை எடுத்துச் சொல்வோம்,” என்றேன் உறுதியுடன்.

தலையசைத்து ஆமோதித்தவர் விடைபெற்றார்.

 


 ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.